41 வயது பெண்ணிற்கு இரட்டை குழந்தை! ஒரு குழந்தை பிறந்து 10 வருடம் கழித்து பிறந்த மற்றொரு குழந்தை!

செய்திகள்

பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறப்பது என்பதே அதிசயம் தான். பொதுவாக இரட்டை குழந்தை பிறந்தால் இரண்டு குழந்தைகளில், ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் சில நிமிடங்கள் வித்தியாசம் இருக்கலாம், ஆனால் ஒரே கருவில் உருவான ஒரு குழந்தை பிறந்து பத்தாண்டுகள் கழித்து அடுத்த குழந்தை பிறந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

சீனாவை சேர்ந்த 41 வயது பெண் ஒருவருக்கு இயற்கையாக குழந்தை உருவாகாததால், சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து கருத்தரித்த அந்த பெண் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

முதல் குழந்தை பிறந்து 9 ஆண்டுகள் கழித்து அந்த பெண் தனக்கு மற்றொரு குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதனால் அவர் முதல் குழந்தை பெறுவதற்கு சிகிச்சை பெறுவதற்கு சென்ற அதே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருந்தது. அந்த பெண்ணிற்கு முதல் குழந்தை உருவான அதே நேரத்தில், அதே உயிரணுக்களை இணைத்து மேலும் சில கருமுட்டைகளை உருவாக்கி சேமித்து வைத்திருந்துள்ளனர் அந்த மருத்துவமனை மருத்துவர்கள்.

நீண்ட வருடங்களுக்கு பின்னர் அதே தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டதும், அதே கருமுட்டைகளிலிருந்து இன்னொன்றை எடுத்து அதை அந்த பெண்ணின் கருப்பையில் வைத்துள்ளனர். இந்தநிலையில், கடந்த வாரம் முதல் குழந்தை பிறந்த அதே மருத்துவமனையில் மற்றொரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் அந்த பெண். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அந்த பெண்ணிற்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் பத்தாண்டுகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள் என கூறியுள்ளனர்.