புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எதற்காக?? ஒரு அருமையான விளக்கம் இங்கே படியுங்கள்..!!

செய்திகள்

வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் புரட்டாசி சனிக்கிழ மைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்தால் அல்லவை நீங்கி நல்லவை சேரும், வளமான வாழ்வு வசப்படும் என்பது ஐதீகம். தடைகள் அகன்று மங்களம் அமையப் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனாலேயே புரட்டாசி மாதம் ‘பெருமாள் மாதம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது.

ஏன் புரட்டாசி சனி?
********
இந்தமாதத்தை எமனின் கோரைப்பற்களுள் ஒன்றாகக் கூறுகிறது அக்னி புராணம். எம பயம் நீங்கவும், துன்பங்கள் விலகி நன்மைகள் கூடவும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருப்பார்கள்.

புரட்டாசி விரதத்துக்கும் வழிபாட்டுக்கும் இன்னு மொரு காரணமும் உண்டு. சனி பகவான் புரட்டாசி மாதத்தில் தான் அவதரித்தார். சனி பகவானால் விளையும் கெடுபலன்களை குறைப்பதற்காக காக்கும் கடவுளுக்கு சனிக்கிழமை விரதம் இருக்கும் வழக்கம் தொடங்கியது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்ய தேசங்களும் திரு விழாக்கோலம் பூண்டிருக்கும். திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்ச வமும் திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். சிலர் புரட்டாசி மாதத்தில்தான் தங்கள் நேர்த்திக் கடன்களையும் குலதெய்வ வழிபாடுகளையும் நிறைவேற்றுவர்.

வீடுகளில் விரதம் இருப்பவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு, மாவிளக்கேற்றி, வடை பாயசத்துடன் அமுது சமைத்துப் படையலிட்டுப் பூஜையை நிறைவேற்றுவர். சிலர் தங்கள் குடும்ப வழக்கப்படி தங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் மடியேந்தியோ, உண்டியல் குலுக்கியோ தானம் பெற்று அதில் கிடைக்கும் அரிசியில் பொங்கலிட்டு வழிபடுவர்.

பெருமாளுக்கு மண்சட்டியில் நிவேதனம்
************
சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று விரதத்தை அனுஷ்டிக்க பெரிய அளவுக்கு காசு, பணம் தேவையில்லை. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள்.

இதை, ஒரு சம்பவம் மூலம் தெரிந்து கொள்ள லாம். தசாவதாரங்கள் எடுத்த பின்பு குறிப்பாக கண்ணனாக அவதரித்து, கீதை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார்.

இவ்வூரின் அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், சீனிவாசனின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார். ஆனால், இதற்கு பலனாக, “மிக உயர்ந்த செல்வம்…’ வேண்டும் என பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். அது என்ன தெரியுமா பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக வசிக்க வேண்டும் என்பது தான்.

இவர் தினமும் மண்பாண்டம் செய்வார் அல்லவா.. பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்க மாட்டார். அந்த மண்ணை கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார். திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு,”ஏடுகுண்டல வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, பத்மநாபா, சீனிவாசா…’ என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களை தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்.

அப்போது, திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தான் தொண்டைமான் எனும் மன்னன். அவன் ஒருநாள் ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றான். பெருமாளுக்கு தூவுவதற்காக அவன் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தான். அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாகக் கிடந்தன. தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டான். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டான்.

மறுநாள் அவன் சன்னிதிக்கு வந்தான். அப்போதும், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்தன. என்ன தவறு நிகழ்ந்திருக்கும் என்ற யோசனையுடனேயே உறங்கினார்.

குழம்பிப் போன அவர் கனவில், சீனிவாசன் தோன்றினார். “மன்னா… பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்ககளால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன…’ என்றார்.

மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றான் மன்னன். அவர், பெருமாளின் மண்சிலைக்கு மண் பூக்களைத் தூவிக் கொண்டிருந்தார். “எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்து பூக்கள் கூட கிடைக்கவில்லையா?’ என்றான்

“அரசே… நான் பரம ஏழை. இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட் டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் தவிக்கும். அதனால் என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்…’ என்றார்.

இதைக் கேட்ட தொண்டைமான் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு பணம் கொடுத்தான். ஒரே நாளில் செல்வந் தனாகி விட்டார் அந்தக் குயவர். நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார்.

இதனால் தான், இப்போதும் திருப்பதியில்,
பீமன் என்னும் அந்தக் குயவனின் பக்தியைப் பறைசாற்றும் வகையில் இன்றுவரை பெருமாளுக்கு மண்சட்டியில்தான் திருவமுது படைக்கப்படுகிறது.

ஓம் நமோ வேங்கடேசாய !