கபாலி ஷூட்டிங்கிற்காக மலேசியாவுக்கு செல்ல வந்த ரஜினிகாந்த், தனது பாஸ்போர்ட்டை மறந்து வீட்டில் வைத்துவிட்டார். பின்னர், பாஸ்போர்ட் கொண்டு வந்த பிறகு, விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.நடிகர் ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்தில் நடித்து வந்த போது அந்த படத்தின் இறுதி காட்சி மலேசியாவில் படமாக்கப்பட்டது . அதில், சில காட்சிகளில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், மலேசியாவுக்கு புறப்பட்டார்.
காலை சுமார் 11.45 மணிக்கு சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணம் செய்வதற்காக காலை 10.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.
அப்போது, அங்குள்ள குடியுரிமை சோதனை மையத்துக்கு சென்ற அவர், தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவை எடுப்பதற்காக கைப்பையை எடுத்தார். ஆனால், அதில் எந்த ஆவணமும் இல்லாததை கண்டு அ திர்ச்சியடைந்தார். இதனால் பதற்றம் அடைந்த ரஜினி, அங்கிருந்த அதிகாரிகளிடம், தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்ததாக கூறினார்.

அதற்கு அதிகாரிகள், விமானம் புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது. அதனால், வீட்டுக்கு யாரையாவது அனுப்பி கொண்டு வரும்படி அறிவுறுத்தினர். அதன்படி உடனே தனது செல்போனில் வீட்டுக்கு தொடர்பு கொண்ட ரஜினி, நடந்த சம்பவத்தை கூறினார்.
மேலும், ஆவணங்களை கொண்டு வரும்போது காரில் வரவேண்டாம். போக்குவரத்து நெரிசலில் தாமதம் ஆகும். அதனால், பைக்கில் கொண்டு வரும்படி கூறினார். அதன்படி அலுவலக உதவியாளர், தனது பைக்கில் ரஜினியின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை எடுத்து கொண்டு விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
இதற்கிடையில், ரஜினி அனைவருக்கும் அறிமுகம் ஆனவர், பிரபலமானவர் என்பதால் மற்ற சோதனைகளை முடித்து கொள்ள அதிகாரிகள், அவருக்கு அனுமதி அளித்தனர். அவரும் சோ தனைகளை முடித்து கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு வந்த உதவியாளர், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம், ரஜினியின் ஆவணங்களை ஒப்படைத்தார். அவை ரஜினியிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. இதைதொடர்ந்து ரஜினி, விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காலை 11.45 மணிக்கு புறப்படும். ஆனால், இவருக்காக 30 நிமிடம் தாமதமாக மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டது.