கொரோனா வைரஸ் டிசம்பர் மாதத்தில் உச்சத்தைத் தொடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்…!!

செய்திகள்

கடந்த வருடம் டிசம்பர் 31, 2019 அன்று சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஒரு மர்மமான நிமோனியா போன்ற ஒரு நோயாக வெளிவந்த கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இன்று வரை கொரோனா வைரஸ் சுமார் 213 நாடுகளுக்கு பரவியுள்ளது. இது உலகெங்கிலும் சுமார் 23 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்து, 8,12,537 இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஒரு கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், SARS-CoV-2 வைரஸ் கணிசமாக மாறவில்லை என்றாலும், இது இன்னும் ஆபத்தான விகிதத்தில் பரவி வருகிறது.

எனவே கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்கள் என்றாலும், அவ்வளவு விரைவில் கண்டுபிடிக்க முடியாது.

கொரோனா வைரஸ் முதலில் 2019 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் தான் பரவ ஆரம்பித்தது. தற்போது 2020 ஆம் ஆண்டின் குளிர்காலமே வரப் போகிறது.

இந்த காலத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளைத் தூண்டக்கூடும் என்று உலக சுகாதார வல்லுநர்கள் நம்புகின்றனர். மேலும் இது முந்தைய காலத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கும்.

 

முன்பு உலக சுகாதார அமைப்புடன் பணிபுரிந்த தொற்றுநோய் நிபுணர் கிளாஸ் ஸ்டோஹர், “கொரோனா வைரஸிந் நடத்தை மற்ற சுவாசநோய்களில் இருந்து மிகவும் வேறுபட்டதில்லை. குளிர்காலத்தில், இந்த தொற்றுநோய் மீண்டும் தீவிரமாக பரவ ஆரம்பிக்கும்.”

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையை சமாளிப்பதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் தற்போது நாம் போராடிக் கொண்டிருப்பதை விட மிகவும் மோசமாக டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கலாம்.

இங்கிலாந்தின் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸால் செய்யப்பட்ட மாடலிங் படி, 2020 ஆம் ஆண்டு வரக்கூடிய குளிர்காலம் நமக்கு மிகவும் சவாலானதாக இருக்கலாம். முக்கியமாக 2021 ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும்.

நமக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன்பே குளிர்காலம் வருவதால், கொரோனா வைரஸ் மக்களிடையே மோசமாக பரவுவதைத் தவிர்க்க, அதற்கேற்ப மூலோபாயம் செய்ய வேண்டும்.

குளிர்ந்த காலநிலை மற்றும் அதிக ஈரப்பதம் தொற்றுநோயின் பரவலை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவதால், கொரோனா வைரஸிற்கான பரிசோதனையை அதிகப்படுத்துதல், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றுதல் மற்றும் தனிமனித சுகாதார நடவடிக்கைகளை எவ்வித குறைபாடும் இல்லாமல் பின்பற்றுதல் போன்றவை குளிர்காலங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும்.