கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவியை ஊக்குவித்து, அவர் நீட் பயிற்சி பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து, மாணவியின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். நம்மால் முடியும் என்றால் பிறருக்கு உதவலாம் என்பதற்கு இவர் ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டு.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பூக்கொல்லை எனும் கிராமத்தை சேர்ந்த மாணவி சஹானா. இவரது தாய், தந்தை இருவரும் கூலி தொழிலாளர்கள். கஜா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்ட இந்த மாணவியின் வீட்டில் மின்சார வசதி கிடையாது. இவ்வாறு அரசு பள்ளியில் படித்த சஹானா 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 524 மதிப்பெண்கள் பெற்றார்.
மருத்துவராகி ஏழை எளியோருக்கு உதவ வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்துவந்த சஹானா குறித்து சமூக வலைதளத்தின் மூலம் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு உதவ முன்வந்து நீட் பயிற்சிக்கான அனைத்து செலவுகளையும் ஏற்று அவரை ஊக்குவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர் முயற்சியின் காரணமாக நீட் தேர்வில் வெற்றிபெற்ற சஹானாவிற்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி சஹானாவிற்கும் அவரது மருத்துவர் கனவை நனவாக்கிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.