எஸ்.பி.பி-யின் உடல்நிலை நுரையீரல் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்… வெளியான தகவல்…!!

செய்திகள்

‘எஸ்.பி.பி.யின் நுரையீரல் செயல்பாட்டில் கடந்த இரு நாட்களை காட்டிலும் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார்.

கொரோனா பாதிப்புக்கு ஆளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்75 சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்கிவரும் நிலையில் நுரையீரல் தொற்று குணப்படுத்தும் சிகிச்சைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவரும் நிலையில் ‘பிசியோதெரபி’ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

எஸ்.பி.பி. ஆரோக்கியமான உடல்நிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளது ரசிகர்கள் நலம் விரும்பிகளுக்கு மகிழ்ச்சியையும் விரைவில் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையையும் தந்துள்ளது.

எம்.ஜி.எம். மருத்துவமனையின் நேற்றைய அறிக்கையில், ‘எஸ்.பி.பி.க்கு ‘வென்டிலேட்டர்’ மற்றும் ‘எக்மோ’ உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. சுயநினைவுடன் இருக்கிறார். குணமடைந்து வரும் அவருக்கு ‘பிசியோதெரபி’ சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்களது மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எஸ்.பி.பி. மகன் சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில் ”எனது அப்பா மெல்ல குணமடைந்து ஆரோக்கியமான உடல்நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். கடந்த இரு நாட்களை விட தற்போது நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் நம்பிக்கையுடன் சிகிச்சை அளித்துவருகின்றனர். அப்பா குணமடைந்து வர பிரார்த்தனை செய்துவருபவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது பிரார்த்தனை தொடரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.