நமக்கு எப்போதும் நம்மை பற்றிய நினைப்பு மட்டுமே இருக்கும் அதாவது எங்க வீட்டுக்கு பக்கத்துலையே தண்ணி பைப், மோட்டர் ரெண்டுமே சேர்ந்த மாதிரி பக்கத்திலேயே இருக்கும். தெரு விளக்கு போட்டு விடும் சுவிட்ச் கூட அதுனுள் தான் இருக்கும். ஆறு மணிக்கு மேல் ஆகி, யாருமே லைட் போட்டுவிடவில்லை என்றால், தெருவே கும்மிருட்டாக இருக்கும். வாரத்தில் இரண்டு முறையாவது, தெருவிளக்கு சுவிட்ச் ஆன் பண்ணி விடும் வேலை எனக்கு வந்து விடும். இந்த ஆறு மாதமாகத்தான், தானே ஆன் ஆகி, ஆப் ஆகும் கருவி பொருத்தியதால் ஒரு சல்லை ஒழிந்திருக்கிறது.
சந்தேகம் வந்தால் உடனே தெரிஞ்சிக்கணும்.சுவிட்ச் போடப்போகும் போதெல்லாம், உள்ளே ஒரு மீட்டர் பாக்ஸ் இருப்பதை பார்த்திருக்கிறேன். அப்போ தான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. நம்ம வீட்டில் வந்து ரீடிங் எடுத்துவிட்டு போனால், அட்டையில் உள்ள நம்பரை சொல்லி கரண்ட் பில் கட்டிவிட்டு வருகிறோம். அப்போ தெருவிளக்கு, தண்ணி மோட்டர் ஓட யார் கரண்ட் பில் கட்டுவாங்க? இதே கேள்வியை அங்கு வரும் லைன் மேன் அண்ணனிடம் கேட்டேன். சிம்பிளா ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு கிளம்பினார்.
அந்த பகுதியை ஆட்சியை செய்பவர்கள் தான் பொறுப்பு.உங்களுக்கு யார் லைட் கம்பம் போட்டு கொடுத்தாங்களோ அவங்க தான் பொறுப்பு என்றார். ஊராட்சியை பொறுத்த வரையில் ஊராட்சி ஒன்றியம் அதற்கு பொறுப்பாகும். பேரூராட்சிகளில் பேரூராட்சி நிர்வாகம் அதற்கு பொறுப்பாகும். நகராட்சிகளில் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மின்சாதனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் பொறுப்பாகும். மாநகராட்சிகளில் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் உள்ள, அரசு மின்சாதனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பாகும்.
இது சிம்பிள் தான் என்றாலும், எதில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்கிற குழப்பத்தால், தெருவிளக்கு எரியவில்லை என்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பிய அனுபவமும் எனக்குண்டு. நமக்கு இன்னும் பல அடிப்படையான விஷயங்களே தெரியாமல் தான் இருக்கிறோம்.அடிப்படையான விஷயங்களை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்படி நீங்களும் ஏதாவது ஒரு வித்தியாசமான தருணத்தை உங்கள் வாழ்வில் எதிர்கொண்டிருந்தால், மற்றவர்களுக்கு உதவிட பகிரலாமே.